
தேர்தலில் 238 முறை போட்டியிட்டுத் தோல்வி அடைந்தாலும், மனம் தளராமல் தர்மபுரி மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மராஜன்.
இது தொடர்பாக ஏஎன்ஐ-க்கு பேட்டியளித்த பத்மராஜன், இதுவரை 238 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். ஆனால் தோல்விதான் மிஞ்சியது. 239 -து முறை ாக தர்மபுரி மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். தேர்தலில் போட்டியிடுவதில் உலகச் சாதனை படைப்பதுதான் எனது நோக்கமாகும் என்கிறார்.
தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் நான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன். 238 முறையும் எனக்குத் தோல்விதான் கிடைத்தது. ஒரே ஒரு தேர்தலில் மட்டும் எனக்கு 6,000 வாக்குகள் கிடைத்தன என்றார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபேயி, எல்.கே. அத்வானி, கருணநிதி, ஜெயலலிதா, பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தேர்தலில் வெற்றிபெறுவதைவிட தோல்வி அடைவதையே நான் விரும்புகிறேன். தேர்தலில் வெற்றியை ஒருமுறைதான் அனுபவிக்க முடியும். ஆனால், தோல்விகள் தொடரலாம் என்றார்.
சாதாரண வார்டு தேர்தல் முதல், குடியரசுத் தலைவர் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் நான் போட்டியிட்டுள்ளேன் என்கிறார் பத்மராஜன்.
1988 முதல் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை நான் டெபாசிட் செய்துள்ளேன். நான் எனது வீட்டின் அருகில் ஒரு சிறிய பஞ்சர் கடை வைத்துள்ளேன். அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து இந்த டெபாசிட் தொகையைச் செலுத்துகிறேன். இந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் வரும் தேர்தல்களிலும் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் ஜுன் மாதம் 4 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.