துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும்: ராகுல் காந்தி

மக்களவை துணை சபாநாயகர் பதவியை பாஜக கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது
துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும்: ராகுல் காந்தி
ANI

மக்களவை சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனு இன்றுடன் நிறைவு பெறுவதால் அது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது பாஜக. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிய ராகுல் காந்தி, மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்குத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

18-வது மக்களவைக்குப் புதிதாகத் தேர்வாகியுள்ள எம்.பி.க்களுக்கு உறுதிமொழிப் பிரமானத்தை இடைக்கால சபாநாயகர் செய்து வைக்கிறார். எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்ற பிறகு சபாநாயகருக்கான தேர்தலை நடத்துவார் இடைக்கால சபாநாயகர்.

ஏற்கனவே 17-வது மக்களவையில் சபாநாயகராக இருந்த பாஜவைச் சேர்ந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகர் பதவிக்குக் கொண்டு வர பாஜக தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதே நேரம், மக்களவை துணை சபாநாயகர் பதவியை பாஜக கூட்டணிக்கட்சிகளான தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்படும் வேட்பாளர்களைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகளிடம் பேசினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். அப்போது, `பாஜக கூட்டணி நிறுத்தும் சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம். ஆனால் மரபுப்படி மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும்’ என அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ராகுல் காந்தி.

2004-ல் அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சரண்ஜித் சிங் அட்வால், 2009-ல் பாஜகவைச் சேர்ந்த கரிய முண்டா, 2014-ல் அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை ஆகிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை துணை சபாநாயகர்களாக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த 17-வது மக்களவை முழுவதும் துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in