
மக்கள்தொகையை மட்டுமே அளவீடாக வைத்து மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெறாது என்றும், மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் நினைப்பதாகவும் பேசியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
2026-ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள, மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கு 8 மக்களவை தொகுதிகள் பறிபோகும் அபாயம் உள்ளதாகக் கூறி, வரும் மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அண்ணாமலை இன்று (பிப்.25) பேசியதாவது,
`மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெறும்போது அதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று யாரோ முதல்வருக்குக் கூறியிருக்கிறார்கள். அது யார் என்று தெரியவில்லை. அந்த நபரை கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெறவிருப்பதாக மத்திய அரசு எங்கேயும் தெரிவிக்கவில்லை. அதற்கு முதலில் மக்கள்தொகை கணக்கீடு நடைபெற வேண்டும். அதே நேரம் மக்கள்தொகையை மட்டுமே அளவீடாக வைத்து மறுசீரமைப்பு நடைபெறப்போவது கிடையாது.
தமிழகத்தை வழிநடத்த முதல்வருக்கு தகுதி உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக யாரும் பேசாதபோது, அதைப் பற்றி யாரும் கருத்து தெரிவிக்காதபோது எதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவர் கூட்ட வேண்டும்?
காங்கிரஸ் முன்வைத்த மாடலின்படி தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தென்னிந்திய மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்கும் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கடந்த மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடி பேசினார். மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த நினைக்கும் முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்றார்.