
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை தில்லி பல்கலைக்கழகம் வெளியிடுவது அவசியமல்ல என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று (ஆக. 25) தீர்ப்பளித்துள்ளது. மேலும், இது தொடர்பான மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1978-ல் பி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பதிவுகளையும் ஆய்வு செய்ய கடந்த 2016-ல் மனுதாரர் ஒருவருக்கு மத்திய தகவல் ஆணையம் அனுமதியளித்தது. அதே ஆண்டில்தான் பிரதமர் நரேந்திர மோடியும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் வழக்குத் தொடர்ந்தது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 2017-ல் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதன்பிறகு இந்த வழக்கு மீதான விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் இன்று (ஆக. 25) நடைபெற்றது.
இந்த விசாரணையின்போது, பல்கலைக்கழகத்தின் தரப்பில் ஆஜரான மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தின் மீதான மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
ஏனெனில் `தனியுரிமைக்கான’ மதிப்பு `தெரிந்து கொள்ளும் உரிமையை’ விட அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பெரிதும் பொது நலன் இல்லாத நிலையில் `வெறும் ஆர்வத்தின்’ அடிப்படையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனிப்பட்ட விவரங்களை கேட்பது நியாயமல்ல என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதேநேரம், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் `அந்நியர்களின் ஆய்வுக்காக’ அவற்றை வெளியிட முடியாது என்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களைக்கேட்ட மனுதாரர் நீரஜ் சர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, `பொதுநலனைக் கருத்தில் கொண்டு பிரதமரின் கல்வி பதிவுகளை வெளியிட தகவல் அறியும் உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது’ என்று வாதிட்டார்.
இறுதியில், பல்கலைக்கழகத்தின் முறையீட்டை அனுமதித்த நீதிபதி சச்சின் தத்தா, தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தார்.