
தில்லியில் மாணவிகளால் பாலியல் புகார் சுமத்தப்பட்ட சாமியார் தலைமறைவான நிலையில், காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தில்லி விகார் குஞ்ச் பகுதியில் தனியார் உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக சைதன்யானந்த சரஸ்வதி சுவாமி என்ற பார்த்தசாரதி இருந்து வந்தார். அவர் மீது அக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 32 மாணவிகள் பல்வேறு புகார் தெரிவித்துள்ளனர். அதில் 17 பேர் அவரால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். காவல்துறையில் மாணவிகள் அளித்த புகாரில், இயக்குநர் சைதன்யானந்த சரஸ்வதி இரவு நேரங்களில் தங்களை அடிக்கடை தன் அறைக்கு அழைத்தார். தொடர்ந்து தகாத முறையில் தொட்டுப் பேசி வந்தார். அடிக்கடி ஆபாச மெசேஜ்களை அனுப்பினார். பாலியல் ரீதியாக அருவருப்பான விதத்தில் பேசினார். தன்னுடன் வெளிநாட்டுக்கு வர வற்புறுத்தினார்.
மாணவிகளின் அறைகள், குளியலறைகளுக்கு அருகே சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, மாணவிகளை ரகசியமாகக் கண்காணித்து வந்தார். ஹோலி பண்டிகையின்போது வண்ணப் பொடிகளைப் பூசுவதாகப் பாலியல் சீண்டல் செய்தார் என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். மேலும், அவரது பாலியல் சீண்டலுக்கு அந்தக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் உடந்தையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து யாரேனும் புகார் தெரிவித்தால் அவர்களது கல்விச் சான்றிதழ்களின் அசல்களைத் தர மறுத்து நெருக்கடி கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
மாணவிகளின் புகார் அடிப்படையில் தில்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளார்கள். இதனால் சைதன்யானந்த சரஸ்வதி சுவாமி தலைமறைவாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் சீண்டல் உட்பட 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 6 நம்பர் பிளேட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.