
தில்லியில் இதுவரை முதல்வர் யார் எனத் தேர்வு செய்யப்படாத நிலையில், பிப்ரவரி 20 அன்று பதவியேற்பு விழா நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு முறை முழுமையாக ஆட்சி செய்த ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இதுவரை முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கவில்லை. அதற்குள் புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20 அன்று நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தில்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான இறுதி ஒத்திகை நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அண்மைத் தகவல்களின்படி, தில்லி முதல்வரைத் தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏ-க்கள் பிப்ரவரி 19 அன்று கூடுகிறார்கள்.