தில்லி பிஎம்டபுள்யூ விபத்தில் என் தந்தையைக் காப்பாற்றி இருக்கலாம்: நவ்ஜோத் சிங் மகன் ஆதங்கம் | Delhi BMW Accident |
தில்லியில் பிஎம்டபிள்யு கார் மோதி அரசு அதிகாரி உயிரிழந்த சம்பவத்தில், அருகில் இருந்த சிறப்பு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று அதிகாரியின் மகன் கூறியுள்ளார்.
தில்லியில் மத்திய பொருளாதார விவகாரத்துறை துணை செயலர் நவ்ஜோத் சிங் தனது மனைவியுடன் தவுலா குவான் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ரிங் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பிஎம்டபிள்யு கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நவ்ஜோத் சிங் மற்றும் அவரது மனைவியை ஜிடிபி நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நவ்ஜோத் சிங் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது. அவரது மனைவி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நவ்ஜோத் சிங்கின் மகன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் நவ்ஜோத் சிங்கின் மகன் நவ்நூர் சிங், "எனக்கு குடும்ப நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. எனது பெற்றோர் ஜிடிபி நகரில் உள்ள நியூ லைஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அவர் தெரிவித்தார். விபத்து பகல் ஒரு மணி அல்லது 1:30 மணியளவில் நடந்தது. ஒரு பெண் பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்து எனது பெற்றோர் வந்த வண்டியின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த தவுலா குவான் பகுதியில் பல சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன, மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையும் உள்ளது, அங்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டிருந்தால், அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். என் பெற்றோரை ஏன் அவர்கள் 20 கி.மீ. தொலைவில் உள்ள எந்தவித வசதிகளும் இல்லாத மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை.
காரில் இருந்தவர்கள் சிறிய காயங்களுடன் அதே மருத்துவமனையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது நம்பகரமான ஆதாரத்திலிருந்து கிடைத்த தகவலாகத் தெரியவில்லை. ஜிடிபி நகரில் உள்ள நியூ லைஃப் மருத்துவமனை, பிஎம்டபிள்யூ காரை ஓட்டிய பெண்ணுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. எனது பெற்றோர் ஒரு டெலிவரி வேனில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது" என்று அவர் கூறினார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனிடையே இரு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Delhi | BMW Car accident | Navjod Singh |