கடந்த சில நாட்களாக தில்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியதை அடுத்து, செயற்கை மழை பொழிவை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நடப்பாண்டு திபாவளியைத் தொடர்ந்து தலைநகர் தில்லியில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்தது. கடந்த சில நாட்களாக தில்லியின் காற்று தரக் குறியீடு 450-க்கும் (மிக மோசம்) ஆக உள்ளது. இதை அடுத்து அவசர கால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கட்டுமான வேலைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு, தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று (நவ.19) எழுதிய கடிதம் பின்வருமாறு,
`இன்றைய தேதியில் தில்லியின் காற்று தரக்குறியீடு 450-ஐ தாண்டியுள்ளது. இதை ஒட்டி மாசுவைக் குறைக்கும் வகையில் அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. காற்று மாசுவை எதிர்கொள்ளும் வகையில் கடந்த செப்.25-ல் தொடங்கி குளிர்கால செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
காற்றின் தரத்தை உயர்த்தும் வகையில் மாற்று தீர்வுகள் குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றன. இத்தகைய அவசர நிலை காலங்களில், காற்று மாசுவைக் குறைக்க செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை ஐஐடி கான்பூருடன் இணைந்து கடந்த வருடம் தில்லி அரசு ஆராய்ந்தது.
தில்லியில் தற்போது காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே அவசரகால நடவடிக்கையாக தில்லியில் செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்த அனுமதி வழங்க வேண்டும்’ என்றார்.