
தில்லி கரோல்பாக் பகுதியில் இருக்கும் ராவ்ஸ் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தின் கீழ்தளத்தில் செயல்பட்டு வந்த படிப்பகத்தில் கடந்த ஜூலை 27-ல் வெள்ள நீர் புகுந்தது. இதில் மூழ்கி குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வந்த 3 தேர்வர்கள் மரணமடைந்தனர்.
சட்டவிரோதமாக கீழ்தளத்தில் செயல்பட்டு வந்த படிப்பகத்தால் தேர்வர்கள் இறந்ததுக்கு நீதி கேட்டு ஜூலை 28-ல் அதே பகுதியில் குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகி வரும் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் போராட்டத்தில் இறங்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து சம்மந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர், பயிற்சி மையத்தின் உரிமையாளர் போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
கரோல்பாக் பகுதியைச் சேர்ந்த தில்லி மாநகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்தப் பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுமானங்களை ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்களை வைத்து இடித்துத் தள்ளியது தில்லி மாநகராட்சி. அதே போல சட்டவிரோதமாக கீழ்தளங்களில் செயல்பட்டு வந்த பல படிப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இருப்பினும் கரோல்பாக் பகுதியில் தேர்வர்கள் தொடர்ந்து 6-வது நாளாக இன்று (ஆகஸ்ட்) போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் இந்த விவகாரத்தில் இன்று (ஆகஸ்ட் 2) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.
3 தேர்வர்களின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது தில்லி உயர் நீதிமன்றம். இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையாலும், இதில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியிருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.