
ரூ. 200 கோடி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் 26 சொகுசு கார்கள் விற்பனை செய்ய தில்லி உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தேய்மானம், சிதைவு போன்ற காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளது உயர் நீதிமன்றம்.
சொகுசு கார்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய பணம் முழுவதையும், வட்டி கிடைக்கக்கூடிய வகையில் முதலீடு செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.
சொகுசு கார்களை விற்பனை செய்ய தில்லி உயர் நீதிமன்றம் எடுத்த முடிவை எதிர்த்து சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மனு அளித்தார். லீனாவின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுவர்ணா காந்தா சர்மா, `இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வாகனங்கள் சிதைவு மற்றும் தேய்மானங்களுக்கு உள்ளாகின்றன. இதனால் அவற்றின் மதிப்பு மற்றும் செயல்பாடு கணிசமாக பாதிக்கப்படுகிறது’ என்றார்.
2017-ல் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தர பணம் பெற்ற வழக்கின் மூலம் முதல் முறையாக கவனம் பெற்றார் சுகேஷ் சந்திரசேகர். இதை அடுத்து தில்லி மதுபானக் கொள்கை வழக்கு, பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகளில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, வழக்குகள் பதியப்பட்டன.
கடந்த 2021-ல் அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் சுகேஷுக்குச் சம்மந்தமான இடங்களில் சோதனை நடத்தின. அப்போது சென்னை கடற்கரையை ஒட்டிய அவரது ஆடம்பர பங்களாவில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற 26 சொகுசு கார்களைக் கைப்பற்றியது அமலாக்கத்துறை.