காற்று மாசு காரணமாக தலைநகரில் ‘அவசர நிலை’ ஏற்படுள்ளது: தில்லி உயர் நீதிமன்றம் கருத்து | Delhi High Court |

ஜிஎஸ்டி கூட்டத்தைக் கூட்டி காற்று சுத்திகரிக்கும் இயந்திரத்தின் மீதான வரிகளைக் குறைக்கவோ நீக்கவோ வேண்டும்...
தில்லி உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
தில்லி உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
2 min read

தலைநகர் தில்லியில் காற்று மாசால் உருவாகியிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு காற்று சுத்திகரிக்கும் இயந்திரம் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கவோ, விலக்களிக்கவோ வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனால் அங்கு வசிப்போர்க்கு சுவாசப் பிரச்னைகள் உட்பட பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிகப்படியாக காற்றின் ஈரப்பதம், அண்டை மாநிலங்களில் வைக்கோல்களை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரம் மோசமாகி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் தில்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலை வரை செல்கிறது.

காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி

இதற்கிடையில் வீடுகளில் பயன்படுத்தும் காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்களுக்கு மத்திய அரசு 18% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்களை மருத்துவ உபகரணங்களாக அறிவித்து, அவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபாத்யாய் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கடேலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

“ஜிஎஸ்டி என்பது கொள்கை முடிவு”

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்களுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டியை விதிப்பது பெருவாரியான மக்கள் தொகைக்கு அந்தப் பொருளை வாங்க முடியாத சூழலுக்குத் தள்ளியிருக்கிறது. இதன் மூலம் குறைந்தபட்ச பாதுகாப்பான காற்று கிடைக்கும் சூழலை வீடுகளில் ஏற்படுத்த முடியாமல் மக்கள் மீது அழுத்தம் சுமத்தப்படுகிறது” என்று வாதிட்டார். பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜிஎஸ்டி என்பது அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் இணைந்து எடுத்த கொள்கை முடிவு. அதில் பரிசீலனை செய்ய ஜிஎஸ்டி குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று வாதிட்டார்.

தலைநகரில் அவசர நிலை

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:- “நாட்டு மக்களுக்கு மாசில்லாத காற்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசு குறைந்தபட்சம் செய்ய வேண்டிய கடமை. அதைக் கூடச் செய்ய முடியாமல் காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பது சரியா? காற்று மாசு இருக்கும் நகரத்தில் சுத்திகரிக்கும் இயந்திரத்தை சொகுசுப் பொருளாகக் கருத முடியாது. நாட்டின் தலைநகரில் நிலவும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிக்க வேண்டும். அல்லது ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5% ஆக குறைக்க வேண்டும். இது தொடர்பாக ஜிஎஸ்டி குழு கூட்டம் விரைந்து முடிவெடுக்க வேண்டும். நேரில் ஜிஎஸ்டி குழு கூட்டத்தை விரைவாக கூட்ட முடியவில்லை என்றால் காணொளிக் காட்சி மூலமாகவும் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கலாம்” என்று கூறி, வழக்கு விசாரணையை டிசம்பர் 26-க்கு ஒத்தி வைத்தனர்.

Summary

The Delhi High Court has ordered that the GST tax on air purifiers be reduced or exempted in view of the emergency situation created by air pollution in the capital Delhi.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in