கெஜ்ரிவால் பிணை வழக்கு: ஜூன் 26-க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

"கெஜ்ரிவாலுக்குப் பிணை வழங்கப்பட்ட வழக்கில் இறுதி உத்தரவைப் பிறப்பிக்காமல் பிணை உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது வழக்கத்துக்கு மாறானது."
கெஜ்ரிவால் பிணை வழக்கு: ஜூன் 26-க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணை நிறுத்திவைக்கப்பட்ட வழக்கில், தில்லி உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் காத்திருக்கலாம் என்று கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை பிணை வழங்கியது. இதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தில்லி உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இதை விசாரித்தது. வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியில் வருவது சிக்கலானது.

இதை எதிர்த்து, கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ் ராஜு வாதிடுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலின் பிணையை நிறுத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது. எனவே, வழக்கை ஒத்திவைக்க வேண்டும்" என்றார்.

கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "வழக்கு விசாரணையின் முதல் நாளில் பிணை உத்தரவை நிறுத்திவைக்கும் நடைமுறை என்பது இதுவரை நடந்திராத ஒன்று. ஒருவேளை அமலாக்கத் துறையின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தால், இழந்த நேரத்தை நீதிபதி எப்படி சரிகட்டுவார்?. ஜூன் 21 அன்று காலை 10.30 மணியளவில் எந்தக் காரணமும் இல்லாமல் பிணை உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. இதன்பிறகே, வாதங்கள் கேட்கப்பட்டன" என்றார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்விஎன் பாடி ஆகியோர் கெஜ்ரிவாலுக்குப் பிணை வழங்கப்பட்ட வழக்கில் இறுதி உத்தரவைப் பிறப்பிக்காமல் பிணை உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது வழக்கத்துக்கு மாறானது என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டார்கள். மேலும், தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓரிரு நாள்களில் வரவுள்ளது, இறுதி உத்தரவுக்குக் காத்திருப்பதே சரியானதாக இருக்கும் என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 26-க்கு ஒத்திவைத்தார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in