கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு

கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு

"இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மட்டுமே அனுமதி."

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

இந்த வழக்கானது மீண்டும் வியாழக்கிழமை அல்லது அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தத்தா ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்கள்.

வழக்கு விசாரணையின்போது, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார் என கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அரசின் செயல்பாடுகளில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் இல்லையெனில் எந்தவொரு இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது என்றும் தெரிவித்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, வழக்கில் இன்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இவருடைய நீதிமன்றக் காவல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தால் மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in