

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த விவகாரத்தில் சோனியா காந்திக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 1983-ல் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக 1980 வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிராக விகாஸ் திரிபாதி என்பவர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை கடந்த செப்டம்பர் 11-ல் விசாரித்த கீழமை நீதிமன்றம், குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்றும், வாக்காளர் பட்டியல்களுக்கான தகுதியை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தீர்மானிக்கிறது என்றும் கூறி, போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக திரிபாதி தரப்பு தில்லி நீதிமன்றத்தில் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரிபாதியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "சில ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு பதிலாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘‘இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க போலி ஆவணங்களைக் கொடுத்து மோசடி செய்ததாக சோனியா காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றவியல் சீராய்வு மனுவுக்கு சோனியா காந்தி மற்றும் தில்லி காவல் துறை பதிலளிக்க வேண்டும்” என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
The Delhi High Court has issued a notice to Sonia Gandhi for including her name in the voter list before she became an Indian citizen.