
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரமுல்லா மக்களவை தொகுதியின் எம்.பி. எஞ்சினியர் ரஷீத்துக்கு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் வகையில் நாளை (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் 4 வரை தில்லி நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது. அத்துடன், அவரது இடைக்கால ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இடைக்கால ஜாமின் வழங்கப்படவேண்டும் அல்லது பயணச் செலவுகள் இல்லாமல் காவலில் இருந்துகொண்டு நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கவேண்டும் என்று ரஷீத் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார், ஏனென்றால் தனிப்பட்ட பணிகளுக்காக அல்லாமல், தனது மக்கள் பணிக்காக நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜித் சிங், பரோல் அளித்திருந்தாலும், அவருக்குப் பயண செலவுகளை விதித்தார். இதனால் இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் ரஷீத்தின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ரஷீத், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லாவை தோற்கடித்தார். எட்டு வருடங்கள் பழமையான பயங்கரவாத நிதியுதவி வழக்கில், 2019 முதல் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நான்கு நாள்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 9, 2019 அன்று தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ரஷீத்தை கைது செய்தது.
பிரிவினைவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு பல்வேறு பொது தளங்களைப் பயன்படுத்தினார் என்றும், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்புடையவர் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ரஷீத் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120பி (குற்றச் சதி), 121 (அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுத்தல்) மற்றும் 124ஏ (தேசத்துரோகம்) ஆகியவற்றுடன், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் (UAPA) பயங்கரவாதச் செயல்கள் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான குற்றங்களுக்காகவும், ரஷீத் மீது மார்ச் 2022-ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், தன்னை சிக்க வைக்க பழைய பேஸ்புக் பதிவு மற்றும் இரண்டு பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை மட்டுமே தேசிய புலனாய்வு அமைப்பு சமர்ப்பித்துள்ளதாக ரஷீத் கூறி வருகிறார்.