
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக மூத்த தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான போக்சோ வழக்கை முடித்துவைப்பதாக தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரிஜ் பூஷண் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். இவர் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர். கடந்த ஏப்ரல் 2023-ல் 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பிரிஜ் பூஷண் சிங் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களில் ஒரு மல்யுத்த வீராங்கனைக்கு சம்பவம் நடந்தபோது 18 வயதுக்கும் குறைவு. எனவே, இவருடைய வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தனியாகப் பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பெண்ணின் தந்தை பொய் புகார் அளித்ததாக வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் ஜூன் 2023-ல் வழக்கை ரத்து செய்வதாக தில்லி காவல் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜூலையில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய தந்தைக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
ஆகஸ்ட் 2023-ல் நீதிமன்ற விசாரணையின்போது, புகாரளித்த பெண் மற்றும் அவருடைய தந்தை காவல் துறை விசாரணை திருப்தியளிப்பதாகவும் வழக்கை ரத்து செய்வதாகத் தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிர்ப்பு இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து, காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைப்பதாக தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மல்யுத்த வீராங்கனை இதை ஏற்றுக்கொண்டார்.
எனினும், மற்ற மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் தொடர்புடைய வழக்கு பிரிஜ் பூஷண் சிங் மீது இன்னும் நிலுவையில் உள்ளது.
முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அலுவலகத்தில் 2016 முதல் 2019 வரை பிரிஜ் பூஷண் சிங்கால் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை கோரி சாக்ஷி மாலிக், வினேஷ் ஃபோகாட், பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா ஃபோகாட் உள்ளிட்டோர் 2023-ல் தில்லியில் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக விசாரிக்க விளையாட்டுத் துறை அமைச்சகம் கமிட்டி அமைத்தது. பிறகு, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து மே மாதம் தில்லி காவல் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.