தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா

"காங்கிரஸுக்கு எதிராகப் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி தொடங்கப்பட்ட ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்ததில் தில்லி காங்கிரஸுக்கு விருப்பமில்லை."
தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் அரவிந்தர் சிங் குறிப்பிட்டுள்ளதாவது:

"தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக நான் நியமிக்கப்பட்டதிலிருந்து தில்லி காங்கிரஸ் கமிட்டியில் மூத்தவர்களுக்குப் பதவிகளை வழங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் (தில்லி பொறுப்பு) என்னை அனுமதிக்கவில்லை. மிக மூத்த தலைவர் ஒருவரை ஊடகப் பிரிவு தலைவராக நியமிக்கப்பதற்கான எனது பணி நியமன உத்தரவு அப்பட்டமாக நிராகரிக்கப்பட்டது. இதுவரை தில்லியில் வட்டத் தலைவர்களை நியமிக்கக்கூட பொதுச்செயலாளர் என்னை அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக தில்லியில் 150 வட்டங்கள் தலைவரே இல்லாமல் இருக்கின்றன.

காங்கிரஸுக்கு எதிராகப் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி தொடங்கப்பட்ட ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்ததில் தில்லி காங்கிரஸுக்கு விருப்பமில்லை. காங்கிரஸுக்கு எதிராகப் பொய் குற்றச்சாட்டுகளை வைத்த அந்தக் கட்சியின் அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் இன்று சிறையிலிருக்கிறார்கள். இருந்தபோதிலும், தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கட்சி முடிவு செய்துள்ளது.

கட்சியின் இறுதி முடிவை நாங்கள் மதிக்கிறோம். இந்த முடிவுக்கு வெளிப்படையாக ஆதரவு தருவது மட்டுமின்றி, கட்சித் தலைமையின் உத்தரவுக்கிணங்க, தில்லி காங்கிரஸ் பிரிவு முழுமையாக செயல்படுவதையும் உறுதி செய்திருக்கிறேன்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) அறிவுறுத்தலுக்கிணங்க, எனது நிலைப்பாட்டுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட இரவு, நான் அவரது இல்லத்துக்குச் சென்றேன்.

கட்சித் தொண்டர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாதபோதும், தலைவர் பதவியை வகிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மைக்கு மாறாக, ஆம் ஆத்மியின் தில்லி அரசையும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் வடகிழக்கு தில்லி வேட்பாளர் கண்ணையா குமார் பாராட்டி பேசியதும் தில்லி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்தர் சிங் லவ்லி கடந்தாண்டு ஆகஸ்டில் தில்லி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சித் தலைவர் பதவியை மட்டுமே இவர் ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in