
துணைநிலை ஆளுநரின் உத்தரவின்பேரில் தில்லி முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து, முதல்வர் ஆதிஷியின் உடமைகளை அகற்றி, அதற்குப் பொதுப்பணித்துறை பூட்டுப்போட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளது தில்லி முதல்வர் அலுவலகம்.
தில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த செப்.21-ல் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிஷி. தில்லி முதல்வரின் அதிகாரபூர்வ இல்லம் தில்லியின் ஃபிளாக் ஸ்டாஃப் சாலையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் உத்தரவின் கீழ், தில்லி முதல்வரின் உடைமைகளை அவரது அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து நேற்று (அக்.10) பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றியதாகக் குற்றம்சாட்டி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது தில்லி முதல்வர் அலுவலகம்.
`27 வருடங்களாக தில்லியில் வனவாசம் மேற்கொள்ளும் பாஜக, முதல்வரின் இல்லத்தைக் கைப்பற்ற நினைக்கிறது. வலுக்கட்டாயமாக முதல்வர் அதிஷியின் உடைமைகள் முதல்வரின் இல்லத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. தில்லி முதல்வரின் இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவரைக் குடியமர்த்த துணைநிலை ஆளுநரின் உத்தரவின்பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தில்லி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள தில்லி பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி, `தில்லி முதல்வர் இல்லத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்து, அதற்குப் பூட்டுப்போடப்பட்டுள்ளது. வழக்கமான நடைமுறையில் தூய்மை மற்றும் பிற பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு சில நாட்கள் ஆகும். பணிகள் நிறைவுற்ற பிறகு இல்லம் சம்மந்தப்பட்ட நபருக்கு (முதல்வருக்கு) ஒதுக்கப்படும்’ என்றார்.
`முதல்வர் இல்லம் முறைப்படியாக ஒதுக்கப்படாமலேயே ஆதிஷி தன் உடைமைகளை அங்கே வைத்துவிட்டு, பிறகு அவற்றைத் தாமாகவே அகற்றியுள்ளார். இது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆய்வு நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தவேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளது பாஜக.