சிபிஐ கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல்

தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தில்லி மாநில முதல்வராகவும் பதவி வகிக்கும் கெஜ்ரிவாலை உண்மைக்குப் புறம்பான காரணங்களால் சிபிஐ கைது செய்துள்ளது
சிபிஐ கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல்
1 min read

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை சிபிஐ கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் சிபிஐ கைது செய்துள்ள வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்துள்ளார் கெஜ்ரிவால்.

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால். திஹார் சிறையில் கெஜ்ரிவால் இருந்தபோது கடந்த ஜூன் மாதம் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கில் அவரைக் கைது செய்தது சிபிஐ.

இந்நிலையில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இதில் ஜூலை 12-ல் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். ஆனால் மற்றொரு வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலைக் கைது செய்துள்ளதால், ஜாமின் கிடைத்தும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

இதை அடுத்து சிபிஐ-யின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரியும் தில்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தார் கெஜ்ரிவால். அதில் `அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தில்லி மாநில முதல்வராகவும் பதவி வகிக்கும் கெஜ்ரிவாலை உண்மைக்குப் புறம்பான காரணங்களால் சிபிஐ கைது செய்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் கெஜ்ரிவால் தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த தில்லி உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தை அணுகி கெஜ்ரிவால் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரியும், சிபிஐ கைதை எதிர்த்தும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளார் கெஜ்ரிவால்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in