

தில்லியில் நிலவும் கடுமையான காற்று மாசு காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனால் அங்கு வசிப்போர்க்கு சுவாசப் பிரச்னைகள் உட்பட பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிகப்படியாக காற்றின் ஈரப்பதம், அண்டை மாநிலங்களில் வைக்கோல்களை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரம் மோசமாகி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் தில்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலை வரை செல்கிறது. குறிப்பாக இன்று காலை முதல் நிலவும் கடுமையான பனி மூட்டம் தில்லியில் வானிலையைப் பாதித்துள்ளது. இதனால் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெருமளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை
இன்று காலை நிலவரப்படி சுமார் 118 விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுள்ளன. 18 விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் காரணமாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு இந்திய விமான நிலைய ஆணையம் வட இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்குச் அறிவிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் விமான சேவைகளில் தாமதமோ, பாதைகள் திருப்பி விடப்படவோ வாய்ப்புள்ளதால் மற்ற விமான நிலையங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பயணிகளுக்கு அறிவிப்பு
பயணிகள் தங்கள் விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து சேவையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளது. அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக வட இந்தியாவில் குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் விமான சேவை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு பயணிகள் விமான நிலையங்களுக்கு வரும் நேரம், செக் இன் உள்ளிட்ட பணிகளுக்கு ஒதுக்கும் நேரம் ஆகியவற்றைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இண்டிகோவின் அறிவிப்பு
இது தொடர்பாக சமீபத்தில் தாமதங்கள் மற்றும் விமான சேவை ரத்து காரணமாக சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனம் நேற்று (டிச. 29) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
“தில்லி, அமிர்தசரஸ், சண்டிகர், ஜம்மு, கொல்கத்தா, ராஞ்சி, குவஹாத்தி ஆகிய விமான நிலையங்களில் டிசம்பர் 30 அன்று அதிகாலை நேரப் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக விமான சேவைகளில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள எங்கள் குழு தயாராக உள்ளது. வானிலையை அவ்வப்போது கணித்து வருகிறோம். தாமதங்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளது.
Dense fog continued to disrupt air travel in Delhi on Tuesday, leading to large-scale flight cancellations and delays at Indira Gandhi International (IGI) Airport.The Airport Authority of India (AAI) issued an advisory on Tuesday warning of possible flight delays at select airports in Northern India due to reduced visibility.