தில்லியில் அபாய கட்டத்தில் காற்று மாசு: மூச்சு விடுவதில் பொதுமக்களுக்கு சிரமம்!

ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் காய்ந்த நெற்பயிர்களை வயல்களில் வைத்து எரிக்கும் நிகழ்வு, தில்லியின் காற்று மாசுக்குப் பிரதானமான காரணமாகக் கூறப்படுகிறது.
தில்லியில் அபாய கட்டத்தில் காற்று மாசு: மூச்சு விடுவதில் பொதுமக்களுக்கு சிரமம்!
PRINT-70.88
1 min read

தலைநகர் தில்லியில் இன்று (நவ.3) காலை 11 மணி அளவில் காற்று தரக் குறியீடு அபாய கட்டத்தை எட்டி 377 ஆக பதிவானதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தில்லி மக்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்.31-ல் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் தில்லியில் காற்று மாசு மோசமடைந்தது. அதற்குப் பிறகு நேற்று (நவ.2) காலை, தில்லியில் காற்றின் தரம் சிறிது முன்னேற்றம் அடைந்து, காற்று தரக் குறியீடு 290 ஆக இருந்தது. ஆனால் நேற்று மாலை 4 மணி அளவில், காற்று தரக் குறியீடு 316 ஆக உயர்ந்து மீண்டும் காற்றின் தரம் மோசமானது.

தில்லியின் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் ஸ்டபிள் பர்னிங் (stubble burning) என்ற காய்ந்த நெற்பயிர்களை வயல்களில் வைத்து எரிக்கும் நிகழ்வு, தில்லியின் காற்று மாசுக்குப் பிரதானமான காரணமாக கூறப்படுகிறது. அம்மாநிலங்களில் ஸ்டபிள் பர்னிங்கைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரிதும் கைகொடுக்கவில்லை.

பட்டாசுகளைத் தாண்டி இந்த வாரம் தில்லியின் காற்று மாசு உயர்ந்ததற்கு, அண்டை மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஸ்டபிள் பர்னிங் நிகழ்வு மட்டும் கிட்டத்தட்ட 36 சதவீதம் அளவுக்குக் காரணமாக இருந்துள்ளது.

அதிலும் இன்று (நவ.3) காலை தில்லியின் ஆனந்த விஹார் பகுதியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டி காற்று தரக் குறீயிடு 437 ஆக பதிவாகியுள்ளது. மேலும் லஜ்பத் நகரில் 432 ஆக பதிவாகியுள்ளது. இதனால் தில்லி பொதுமக்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், தில்லியின் துணைக்கோள் நகரங்களான குருகிராம் மற்றும் நொய்டா ஆகியவற்றில் காற்று தரக் குறியீடு பகுதிகளுக்குப் பகுதி மாறுபட்டுப் பதிவாகியுள்ளது. குருகிராமின் பல்வாலில் 351 ஆக இருக்கும் காற்று தரக் குறியீடு, செக்டார் 51-ல் 188 ஆக பதிவாகியுள்ளது. அதே போல நொய்டாவின் செக்டார் 62-ல் 314 ஆக உள்ள காற்று தரக் குறியீடு செக்டார் 125-ல் 287 ஆக பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in