
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தைத் தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நடிகையும், பாஜக மக்களவை எம்.பி.யுமான கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
`நாடு முழுமைக்கும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதே தன் வாழ்நாள் லட்சியமாக இருக்கும் எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதே முதல் பணியாக இருக்கும்' எனவும் கடந்த ஏப்ரல் 24-ல் தில்லியில் பேசினார் ராகுல் காந்தி. `சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது' என்றும் பேசினார் ராகுல் காந்தி.
இதை அடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் நடப்பு மக்களவைக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் வார்த்தையில் மோதிக்கொண்டனர்.
இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு மீதான ராகுல் காந்தியின் கருத்தைக் கிண்டல் செய்யும் விதம், தலையில் குல்லா, கழுத்தில் சிலுவை, நெற்றியில் சந்தனம் குங்குமத்துடன் ராகுல் காந்தி இருக்கும் சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா, அதில் `யாருடைய சாதியையும் கேட்காமல், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நினைப்பவர்’ என்று பதிவிட்டார்.
கங்கனாவின் இந்தப் பதிவுக்கு சமூகவலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா, கங்கனாவின் மீது ரூ. 40 கோடிக்கு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஒப்புதல் இல்லாமல் ஒருவரின் சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவிடுவது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் குற்றமாகும்.