2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவர் என்.கண்ணையா. அவர் பேசியவை பின்வருமாறு:
`2004-க்கு முன்பு மத்திய அரசில் வேலைக்குச் சேர்ந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாகவும், அத்துடன் அகவிலைப்படியும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. ஆனால் 2004-க்குப் பிறகு ரயில்வேயில் சேர்ந்து வேலை பார்த்த ஒரு டிராக் மெயின்டெய்னருக்கு மாதம் ரூ. 1760 மட்டுமே கிடைக்கும், அதேபோல லோகோ பைலட்டுக்கு ரூ. 3760 மட்டுமே கிடைக்கும்.
இந்த நிலையை மாற்ற கடந்த 10 வருடங்களாகப் போராடினோம். கேபினட் செகரெட்டரியைத் தலைவராகக் கொண்ட 47 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களை உறுப்பினர்களாகக் `ஜாயிண்ட் கன்சல்டேட்டிவ் மெஷினரியில்’ இது தொடர்பாகப் பேசினோம்.
அதைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 26) பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் கேபினட் செகரெட்டரியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டார்கள். அதில், பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் முடிந்துவிட்டால், ரயில்வே ஊழியர்களுக்கு 12 மாதங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் சராசரியில் 50 % ஓய்வூதியமாகக் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
வட மாநிலத்திலிருந்து இங்கு பணியாற்ற வருபவர்களுக்கு நம் மக்களின் மொழி புரியவில்லை. அதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போல, அந்தந்த மாநிலங்களுக்கான ரயில்வே ஊழியர்களை அந்தந்த மாநிலங்களில் இருந்தே தேர்வு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றார்.