
கடந்த 2017-ம் ஆண்டு ஏமனில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்ற கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இவற்றை மத்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது என்று நம்ப வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
`நிமிஷா பிரியா வழக்கு குறித்து சில நபர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் தவறானவை’ என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் இந்தியா டுடே ஊடக செய்தியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூலை 16 அன்று நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்திய கிராண்ட் முப்தி என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக நேற்றைக்கு முந்தைய தினம் (ஜூலை 27) கூறினார்.
`முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. (ஏமன் தலைநகர்) சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது’ என்று கிராண்ட் முப்தியின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது.
இருப்பினும், இதை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தும் வகையில் எழுத்துபூர்வமான உத்தரவு ஏமன் அரசாங்கத்திடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட ஏமன் தொழிலதிபர் தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி, தலாலை கொலைசெய்த குற்றத்திற்காக செவிலியர் நிமிஷா பிரியாவை உடனடியாகத் தூக்கிலிடவேண்டும் என்று ஏமன் நாட்டு அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.