
மக்களவையை சுமூகமாக நடத்த நேற்று முடிவு எட்டப்பட்ட நிலையில், சம்பல் கலவரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (டிச.3) வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ல் தொடங்கியது. மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம், சம்பல் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதல் நாள் தொடங்கி நேற்று (டிச.2) வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனை அடுத்து சபாநாயகர், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோருடன் நேற்று நடைபெற்ற மக்களவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் இன்று முதல் மக்களவையை சுமூகமாக நடத்த உடன்பாடு எட்டப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரும் வகையில் இன்று காலை நோட்டீஸ் வழங்கினார் மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் அவைக்கு வெளியே அதானி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
11 மணிக்கு மக்களவை கூடியதும் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பிப் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் மக்களவைக்குள் நுழைந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்க ஆரம்பித்தனர்.