
தீவிரமான முறையில் விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ச்சியாக மீறியதை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள மூன்று அதிகாரிகளை பணியாளர் திட்டமிடல் பிரிவில் இருந்து நீக்குமாறு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சூரா சிங் (கோட்ட துணைத் தலைவர்), பிங்கி மிட்டல் (தலைமை மேலாளர், குழு அட்டவணை திட்டமிடல்) மற்றும் பாயல் அரோரா (குழு அட்டவணை, திட்டமிடல்) ஆகிய மூவரையும் தற்போது வகிக்கும் பொறுப்புகளில் இருந்து நீக்க டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 20 தேதியிட்ட டிஜிசிஏ உத்தரவின்படி, இந்த நபர்கள் அங்கீகரிக்கப்படாத மற்றும் விதிமுறைகளுக்கு இணங்காத வகையில், குறைபாடுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, விமான பணிக் குழுவிற்கான ஓய்வு விதிமுறைகளை மீறியது, மேற்பார்வையில் தோல்வி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த அதிகாரிகள் மூவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளின் முடிவுகளை இந்த கடிதம் பெறப்பட்ட நாளில் இருந்து 10 நாட்களுக்குள் டிஜிசிஏ அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, மறு அறிவிப்பு வரும் வரை விமானப் பாதுகாப்பு மற்றும் பணியாளர் தொடர்பான எந்த ஒரு பொறுப்பிலும் இவர்கள் மூவரும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான இயக்கத்திற்கு தொடர்பில்லாத பொறுப்புகள் இவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.