
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை எதிரொலியாகப் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இருவர் காணாமல் போனதையடுத்து, அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டார்ஜிலிங்கில் சனிக்கிழமை இரவு முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மிரிக் - சுகியாபோக்ரி இடையே சனிக்கிழமை இரவு மிகப் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டதில் பல்வேறு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களால் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக டார்ஜ்லிங் அலுவலர் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மிரிக் ஏரிப் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் இருவர் தேடப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் நான்கு பேர் இடிபாடுகளுக்கு மத்தியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள்.
வெள்ளப் பெருக்கு காரணமாக துதியா இரும்புப் பாலம் உடைந்து சேதமாகியுள்ளது. இதனால், சிலிகுரி - டார்ஜிலிங் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 6 வரை மிகக் கனமழைக்கான எச்சரிக்கையை கொடுத்துள்ளது. நிலச்சரிவுக்கான வாய்ப்பு மேலும் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என டார்ஜிலிங் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கனமழை மற்றும் நிலச்சரிவால் டார்ஜிலிங் மற்றும் சுற்றுவட்டாரங்களில் நிலவும் சூழல்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உறுதிகொண்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Darjeeling | Landslide | Heavy Rain | West Bengal |