எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து கடந்த ஆகஸ்ட் 1-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து, தலித் மற்றும் ஆதிவாசி அமைப்புகள் இன்று (ஆகஸ்ட் 21) நாடு தழுவிய பந்த்-ஐ கடைபிடித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் எஸ்.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 18 % இடஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு 3 % உள்ஒதுக்கீட்டை 2009-ல் வழங்கியது தமிழக அரசு. மேலும் 2006-ல் எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மிகி, மஜாபி சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது பஞ்சாப் அரசு. இந்த இரு விவகாரங்கள் குறித்தும் ஒரே வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.
விசாரணையின் முடிவில், பட்டியலின எஸ்.சி பிரிவினருக்கும், பழங்குடியின எஸ்.டி பிரிவினருக்குமான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஆகஸ்ட் 1-ல் தீர்ப்பு வழங்கியது தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு.
இந்த உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சுபாஷ் சந்திர சர்மா ஆகியோர், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்று கருத்து தெரிவித்தனர்.
இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தலித் மற்றும் ஆதிவாசி அமைப்புகள் இன்று (ஆகஸ்ட் 21) நாடு தழுவிய பந்த்-ஐ கடைபிடித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், இடஒதுக்கீடு தொடர்பான புதிய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்பதும் இந்த அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.
இந்த பந்துக்கு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பகுஜன் சமாஜ் கட்சி, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்த் எதிரொலியால் ராஜஸ்தானின் 7 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பீஹார் மாவட்டம் டானாபூரில் சாலையை மறித்து தலித் அமைப்புகள் போராடி வருகின்றனர்.