தெ.ஆ. அதிபராக 2-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறில் ராமஃபோசா!

நடந்து முடிந்த 7-வது நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்குத் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை
தெ.ஆ. அதிபராக 2-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறில் ராமஃபோசா!
REUTERS

தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சிறில் ராமஃபோசாவை தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுத்தனர்.

கடந்த மே 29-ல் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் 400 இடங்களுக்கு நடந்த 7-வது பொதுத்தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 159 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அறுதிப்பெரும்பான்மைக்கு 201 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், `தேசிய கூட்டணி’, `இன்காதா சுதந்திர கட்சி’ போன்ற கட்சிகளுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்தது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவை உறுப்பினர்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க ஜூன் 14-ல் கூடினார்கள். கூட்டத்தின் முடிவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சிறில் ராமஃபோசா 283 வாக்குகள் பெற்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ராமஃபோசாவை எதிர்த்து நின்ற ஜூலியஸ் மலேமாவுக்கு 44 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

2018-ல் அன்றைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகியதால், துணை அதிபர் சிறில் ராமஃபோசா அதிபராகப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து 2019-ல் நடந்த 6-வது நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக தென்னாப்பிரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார் ராமஃபோசா.

தென்னாப்பிரிக்க நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1994 முதல் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வரும் நாடாளுமன்றப் பொது தேர்தல்களில், முதல் முறையாக நடந்து முடிந்த 7-வது நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in