மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்: காங்கிரஸ் தீர்மானம்

பொறுப்பை ஏற்றுக்கொள்வது குறித்து விரைவில் முடிவெடுத்துச் சொல்வதாக ராகுல் காந்தி செயற்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்: காங்கிரஸ் தீர்மானம்
ANI

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்ய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை நாளை ஏற்கவுள்ளார் நரேந்திர மோடி.

இந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, டிகே சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இந்தக் கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாகக் கேட்டுக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வழிநடத்த ராகுல் காந்தியே சிறந்தவராக இருப்பார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வது குறித்து விரைவில் முடிவெடுத்துச் சொல்வதாக ராகுல் காந்தி செயற்குழுவில் தெரிவித்தார்" என்றார்.

மேலும், "காங்கிரஸ் மீட்டெடுப்பதற்கானப் பணிகள் தொடங்கியுள்ளது. இதுதான் செயற்குழுவின் உணர்வாக உள்ளது" என்றும் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ராய் பரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு இடங்களிலும் வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in