மணிப்பூரில் மீண்டும் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து, அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் நேற்று தலைநகர் இன்பாலில் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் அம்மாநிலத்தின் 3 மாவட்டங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கு நிலவரத்தை முன்வைத்து இன்று (செப்.10) தொடங்கி காலவரையின்றி கிழக்கு இம்பால் மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்துவதாக அம்மாவட்டங்களின் ஆட்சியர்கள் தனித்தனி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். இதை அடுத்து தௌபால் மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுகளில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுகாதாரம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ற நிலை இருப்பதால் ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு தளர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அடுத்தடுத்து குக்கி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ட்ரோன் வெடிகுண்டுத் தாக்குதல், ராக்கெட் தாக்குதல் போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மணிப்பூர் காவல்துறையும், இந்திய ராணுவமும் சோதனைகள் மேற்கொண்டன. இதில் குறிப்பிடத்தக்க அளவில் ஆயுதங்களும், வெடிமருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும் ட்ரோன் வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு சம்பவம் நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் சமர்ப்பிக்கப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசியுள்ளார் மணிப்பூர் ஐஜி ஐ.கே. முய்வா.