மணிப்பூரில் மீண்டும் கலவரம்: இணைய சேவை முடக்கம், அமலானது ஊரடங்கு!

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: இணைய சேவை முடக்கம், அமலானது ஊரடங்கு!

கிளர்ச்சியாளர்கள் தப்பிச் செல்லும்போது அருகிலிருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 3 பெண்களையும், 3 குழந்தைகளையும் கடத்திச் சென்றனர்.
Published on

கிளர்ச்சியாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட 6 நபர்கள் கொலை செய்யப்பட்ட பிறகு, மணிப்பூர் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இதை ஒட்டி 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

கடந்த நவ.11 அஸ்ஸாம் எல்லை ஒட்டி அமைந்துள்ள போரோபெக்ரா காவல் நிலையத்தை கிளச்சியாளர்கள் குழு ஒன்று தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்தாக்குதலில், 11 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். மீதமிருந்த கிளர்ச்சியாளர்கள் தப்பிச் செல்லும்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 3 பெண்களையும், 3 குழந்தைகளையும் கடத்திச் சென்றனர்.

இதனை அடுத்து கிளர்ச்சியாளர்களால் கடத்திச் சென்றவர்களை மீட்கும் வகையில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. மேலும், பாதுகாப்புப் படைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் கடந்த நவ.14 அன்று மணிப்பூரின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (நவ.14) அன்று ஜிர்பம் மாவட்டத்தில் உள்ள ஜிரிமுக் கிராமத்துக்கு அருகே இருக்கும் ஒரு ஆற்றுக்கு அருகே கிளர்ச்சியாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட 6 நபர்களும் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தனர். இந்தக் கொலை விவகாரத்தை முன்வைத்து மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மீண்டும் கலவரம் வெடித்தது.

இதில் சில எம்.எல்.ஏ.க்களின் இல்லங்கள் கலவரக்காரர்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இதைத் தொடர்ந்து இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், சுராசந்த்பூர், கக்சிங், பிஷ்ணுபூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படுவதாகவும், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு மாவட்டங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in