
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர் மோதிராம் ஜாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அண்மையில் பதற்றமான சூழல் நிலவியது. ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது. கடந்த மே 10 அன்று இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக ஒப்புக்கொண்டன. இதன்பிறகு, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
சமீபத்திய கைது நடவடிக்கையில் சிஆர்பிஎஃப் வீரர் மோதிராம் ஜாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2023 முதல் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை பாகிஸ்தானியர்களிடம் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தில்லியில் கைது செய்யப்பட்ட இவர், பட்டியாலா நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை ஜூன் 6 வரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மோதிராம் ஜாதிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சிஆர்பிஎஃப்-ல் இருந்து மோதிராம் ஜாத் பணி நீக்கம் செய்யப்பட்டார். பல்வேறு வழிகளில் பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் மூலம் மோதிராம் ஜாத்துக்கு பணம் கை மாறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
ஏற்கெனவே கடந்த மே 17 அன்று ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 6 பேர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டார்கள்.