வருத்தம் தெரிவிப்பதாக முதலைக் கண்ணீர் வடிப்பு: ம.பி. அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உங்கள் மன்னிப்பு எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் பிரபலமான ஒரு நபர், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. உங்கள் வார்த்தைகளை நீங்கள் எடைபோட்டிருக்கவேண்டும்.
வருத்தம் தெரிவிப்பதாக முதலைக் கண்ணீர் வடிப்பு: ம.பி. அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
1 min read

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஊடகங்களுக்கு விவரித்து வந்த இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக மத்தியப் பிரதேசத்தின் அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

இந்நிலையில், தனது பேச்சுக்கு ம.பி. அமைச்சர் வருத்தம் தெரிவித்ததை நிராகரிப்பதாக இன்று (மே 19) அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அவரை கண்டித்தது மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்ட செயலை `முதலைக் கண்ணீர்’ என்று கூறியதுடன், அவரது கருத்துக்கள் `முற்றிலும் சிந்தனையற்றவை’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

`நீங்கள் கூறிய இந்த மாதிரியான மோசமான கருத்துக்கள், முற்றிலும் சிந்தனையற்றவை. நேர்மையான கருத்துகளை மேற்கொள்வதிலிருந்து உங்களை எது தடுத்தது? உங்கள் மன்னிப்பு எங்களுக்குத் தேவையில்லை. சட்டப்படி எப்படி நடந்துகொள்வது என்பது எங்களுக்குத் தெரியும்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் கூறினார்.

நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமைச்சர் விஜய் ஷாவை கடுமையாக சாடி, `உங்கள் மன்னிப்பு எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் பிரபலமான ஒரு நபர், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. உங்கள் வார்த்தைகளை நீங்கள் எடைபோட்டிருக்கவேண்டும். நீங்கள் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தவதாக இருந்தீர்கள், ஆனால் ஒரு வார்த்தை கூடக் கிடைக்கவில்லை என்பதால், நீங்கள் நிறுத்திவிட்டீர்கள்’ என்று விசாரணையின்போது கூறிப்பிட்டது.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்துகளை விசாரிக்க மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்குமாறு மத்தியப் பிரதேச டிஜிபிக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலத்தின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் விஜய் ஷா, அம்மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுகூட்டத்தின்போது ராணுவ அதிகாரி சோபியா குரேஷி குறித்து வகுப்புவாதக் கருத்தை வெளியிட்டார். `ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்குவதற்காக, பாகிஸ்தானில் உள்ளவர்களின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியை பிரதமர் மோடி அனுப்பியதாக’ அவர் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in