
பாகிஸ்தானி என்று ஒருவரை விமர்சிப்பதை தரக்குறைவானதே, அதேநேரம் அது கிரிமினல் குற்றமல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 80 வயதாகும் ஹரிநந்தன் சிங் என்பவர், அரசு அலுவலகம் ஒன்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு தொடர்பான தகவல்கள் அடங்கிய பதில் கடிதத்தை உருது மொழிபெயர்ப்பாளரும், தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவின் கீழ் பணிபுரியும் எழுத்தருமான ஷமீன் உத்தீன் நேரடியாக ஹரிநந்தன் சிங்கிடம் வழங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் அவரிடம் இருந்து கடிதத்தைப் பெற தயக்கம் காட்டினாலும், ஷமீமின் மதத்தை குறிப்பிட்டு அவரை பாகிஸ்தானி என்று அவதூறு தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரை மிரட்டிய பிறகே கடிதத்தை பெற்றுள்ளார் ஹரிநந்தன்.
அரசு ஊழியர் என்ற முறையில் ஷமீமை பணி செய்யவிடாமல் ஹரிநந்தன் தடுத்ததாகக் கூறி அவர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியரை கடமை செய்யவிடாமல் தடுத்தல் (353), மத உணர்வுகளை புண்படுத்துதல் (298), மிரட்டுதல் (506), அமைதியை சீர்குலைக்க வேண்டுமென்றே அவமதிப்பை ஏற்படுத்துதல் (504) ஆகிய ஐபிசி பிரிவுகளின் கீழ் ஹரிநந்தன் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கையை எதிர்த்து முதலில் மாவட்ட நீதிமன்றத்திலும், பிறகு உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார் ஹரிநந்தன் சிங். அவரது வழக்குகள் ரத்து செய்யப்படவே, பிறகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோரைக் கொண்ட அமர்வு, `பாகிஸ்தானி என்று ஒருவரை கூறுவது தரக்குறைவானதே, ஆனால் அது ஒருவரின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறும் அளவுக்கான கிரிமினல் குற்றம் அல்ல’ என்று கருத்து தெரிவித்து, ஹரிநந்தன் சிங் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.