அமலுக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள்: மாற்றங்கள் என்னென்ன?

சிறுவர்களைக் கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல், கும்பலாக ஒருவரை அடித்துக் கொலை செய்தல் போன்றவற்றுக்கு மரண தண்டனை அளிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
அமலுக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள்: மாற்றங்கள் என்னென்ன?

இந்திய நாடு பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது, இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) அமலுக்கு வந்தன. மேலும் 1974-ம் வருடம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) அமலுக்கு வந்தது. சுதந்திர இந்தியாவில் ஐபிசி மற்றும் ஐஇசி சட்டங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. மேலும் காலத்துக்கு ஏற்ப இந்தச் சட்டங்களின் பிரிவுகளில் அவ்வப்போது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த மூன்று சட்டங்களுக்கு மாற்றாக கடந்த ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா, பாரதிய சாக்‌ஷிய அதிநயம் ஆகிய சட்டமுன்வடிவுகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களும் கடந்த ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.

`இந்திய தண்டனை சட்டம்’ 1860-க்கு மாற்றாக `பாரதிய நியாய சன்ஹிதா’ அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஓருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு தண்டனை வழங்கும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் இருந்த தேசத் துரோகம் என்ற வார்த்தை புதிய சட்டத்தில் இல்லை. மேலும், சிறுவர்களைக் கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல், கும்பலாக ஒருவரை அடித்துக் கொலை செய்தல் போன்றவற்றுக்கு மரண தண்டனை அளிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

`இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம்’ 1974-க்கு மாற்றாக ` பாரதிய நாகரிக் சுரக்‌ஷா’ அமலுக்கு வந்தது. புதிய சட்டத்தின்படி புகார் அளித்தவருக்கு FIR நகல் வழங்குவது கட்டாயம், ஆனால் பழைய சட்டத்தின்படி புகார் அளித்தவருக்கு FIR நகல் வழங்குவது கட்டாயமல்ல. புதிய சட்டத்தின்படி எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம், ஆனால் பழைய சட்டத்தின்படி குற்றம் நடந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமே புகார் அளிக்க முடியும்.

` இந்திய சாட்சிகள் சட்டம்’ 1872-க்கு மாற்றாக `பாரதிய சாக்‌ஷியா’ அமலுக்கு வந்தது. புதிய சட்டத்தின்படி வழக்கு சம்மந்தப்பட்ட சாட்சிகள் காணொளி மூலமாக ஆஜராகலாம், ஆனால் பழைய சட்டத்தின்படி சாட்சிகள் நீதிபதி அல்லது காவல்துறை முன்பாக ஆஜராக வேண்டும். புதிய சட்டத்தின்படி ஆவணங்களை நகல்களாக தாக்கல் செய்யலாம், ஆனால் பழைய சட்டத்தின்படி அசல் ஆவணங்களை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in