
கேரளத்தில் மக்களவைத் தேர்தலுக்கான 4 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா வயநாடு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளார்.
திருவனந்தபுரத்திலிருந்து பன்னியன் ரவீந்திரன், திரிச்சூரிலிருந்து விஎஸ் சுனில் குமார் மற்றும் மாவேலிக்கரையிலிருந்து அருண் குமார் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள்.
இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கிறது. இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தேர்தல் வியூகக் குழுவின் உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியன் பொதுச்செயலாளர் டி. ராஜா உள்ளார். வயநாடு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆனி ராஜா, டி. ராஜாவின் மனைவி.
ஆனி ராஜா கூறுகையில், "கேரளத்தில் எப்போதுமே இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையேதான் போட்டி. எனவே, இதில் எந்தப் புதுமையும் இல்லை. அதே நிலைதான் நீடிக்கிறது, எதுவும் மாறவில்லை" என்றார்.
எங்களுடைய கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணியைப் பொறுத்தவரை எதிர்த்துப் போட்டியிடுபவரைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பினாய் விஸ்வம் தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் வயநாட்டில் வேட்பாளரை அறிவித்துள்ளதால், இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில் ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவனந்தபுரத்திலிருந்து மக்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இருக்கிறார். இங்கும் இடது ஜனநாயக முன்னணி சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.