
2020, 2021 கோவிட் அலைகளைத் தொடர்ந்து ஒப்பீட்டளவில் அமைதியான காலகட்டத்திற்குப் பிறகு, தற்போது ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் கோவிட் தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. கோவிட் வைரஸின் குறித்த எச்சரிக்கைகளை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் மீண்டும் ஒரு கடுமையான கோவிட் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றாலும், விழிப்புடன் இருப்பது புத்திசாலித்தனமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் என்று நாட்டின் சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆசிய நாடுகள் சிலவற்றில் கோவிட் தொற்றுகள் உயருவதால் இந்திய மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், பெரும்பான்மையான இந்திய மக்களிடம் கோவிட் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும், மக்களிடையே லேசான அறிகுறிகளுடன் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவை பெரும்பாலும் சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகளை ஒத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவும் நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளுடன் இருப்பவர்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்று தெரிவிக்கப்படுகிறது.
தொற்றுகள் பலமடங்கு உயரும் அசாதாரணப் போக்கு காணப்படவில்லை என்றாலும், விழிப்புடன் இருப்பதில் தவறில்லை என்று நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
`நம் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு, நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளோம். எனவே, எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களை மட்டுமே நாம் பாதுகாக்க வேண்டும்’ என்று இந்திய அறிவியல் நிறுவனத்தின் நுண்ணுயிரியல் மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவரான டாக்டர் சௌமித்ரா தாஸ் தெரிவித்துள்ளார்.