
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசாவில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், அவதூறு வழக்கு ஒன்றில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவைப் பிறப்பித்து, ஜூன் 26-க்கு முன்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 2018-ல் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுகூட்டத்தின்போது அன்றைய பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, பாஜக தலைவர் பிரதாப் கட்டியார் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, `கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவரால், பாஜகவின் தலைவராகக்கூட முடியும்’ என்று விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தியின் கருத்து அனைத்து பாஜக தொண்டர்களையும் அவமதித்ததாகக் கூறி 9 ஜூலை 2018 அன்று சாய்பாசா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிரதாப் கட்டியார் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இந்த அவதூறு வழக்கை சாய்பாசா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் 2020-ல் உத்தரவிட்டது.
அவதூறு வழக்கில் விசாரணை மேற்கொள்ள தொடர்ச்சியாக சம்மன் அனுப்பியும், நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக முதலில் ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாடினார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பிறகு, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க ராகுல் காந்தி தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதை தற்போது தள்ளுபடி செய்துள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.