
பேச்சுவார்த்தையில் ஈடுபட விவசாயிகள் மறுப்பு தெரிவிப்பதாக பஞ்சாப் அரசு கூறியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் கேட்க நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தங்களது பல அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பஞ்சாப் ஹரியாணா எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் பஞ்சாப் விவசாயிகள். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புய்யான் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞர் குர்மீந்தர் சிங், நேற்றைய (டிச.17) தினத்தில் பேச்சுவார்த்தை நடத்த பஞ்சாப் மாநில அரசு அமைத்த உயர்மட்டக் குழு அழைப்பு விடுத்தும், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், `விவசாயிகள் நேரடியாகவோ அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் வழியாகவோ முன்வைக்கும் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு, நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்’ என்றனர்.
விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப் ஹரியாணா மாநில எல்லையில் அமைந்துள்ள கனௌரியில், கடந்த நவ.26-ல் இருந்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் விவசாயிகள் சங்கத் தலைவரான 70 வயது ஜக்ஜித் சிங் டல்லேவால்.
புற்றுநோயாளியான டல்லேவாலின் நிலையைக் கண்காணித்துப் போதிய மருத்துவ உதவிகள் வழங்குமாறு பஞ்சாப் அரசு வழக்கறிஞரிடம் அறிவுறுத்தியது உச்ச நீதிமன்ற அமர்வு.