பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் தொடர்பான வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

பினய் குமார் சிங் என்பவர், விக்கிமீடியா உள்ளிட்ட அனைத்து இணையதளங்களிலும் இந்த ஆவணப்படங்கள் வெளியிடுவதை தடைசெய்யக்கோரினார்
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் தொடர்பான வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்
PRINE-127
1 min read

தில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றம், பிபிசி வெளியிட்ட `இந்தியா: மோடியின் கேள்வி’ ஆவணப்படம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 18-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி தொலைக்காட்சி நிறுவனம், கடந்த 2023-ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து, `இந்தியா: மோடியின் கேள்வி’ என்ற பெயரில் 2 ஆவணப்படங்களை வெளியிட்டது.

முதல் ஆவணப்படத்தில் குஜராத் முதல்வராக இருந்தபோது மோடியின் செயல்பாடுகள் குறித்தும், 2002-ல் நடந்த கலவரம் குறித்தும் இருந்தது. இரண்டாவது ஆவணப்படத்தில் இந்தியப் பிரதமராக மோடியின் செயல்பாடுகள் குறித்தும், ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனம் வழங்கிய சிறப்பு நிலை அந்தஸ்து ரத்து குறித்தும் இருந்தது.

இது தொடர்பாக தில்லியின் ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பினய் குமார் சிங் என்பவர், விக்கிமீடியா உள்ளிட்ட அனைத்து இணையதளங்களிலும் இந்த ஆவணப்படங்கள் வெளியிடுவதை தடைசெய்யக்கோரினார். மேலும் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி அமைப்புகள் குறித்து இந்த ஆவணப்படங்களில் அவதூறு பரப்பியதற்காக, பிபிசி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு பிபிசி அலுவலகத்தின் லண்டன் முகவரிக்கு சம்மன் வழங்கியுள்ள தில்லியில் உள்ள ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி ருச்சிகா சிங், வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 18-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in