
பிறப்பு விகிதம் 2.1-க்கு கீழ் குறையக் கூடாது என்பதால், தம்பதியினர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாக்வத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பாக்வத் கூறியதாவது:
"மக்கள்தொகை குறைந்து வருவது தீவிரமான பிரச்னை. ஒரு சமுதாயத்தின் பிறப்பு விகிதம் 2.1-க்கு கீழ் குறைந்தால், அது அழிவை நோக்கிய அபாயத்தில் இருப்பதாக லோக்சங்க்ய சாஸ்திரம் சொல்கிறது. இந்தச் சரிவுக்கு வெளியிலிருந்து எந்த அச்சுறுத்தலும் தேவையில்லை. ஒரு சமுதாயம் தாமாகவே அழிந்துவிடும். பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்கள் இந்தப் பிரச்னையின் காரணமாகவே காணாமல் போயுள்ளன. எனவே, பிறப்பு விகிதத்தை 2.1 ஆகக் கடைபிடிப்பது அத்தியாவசியம்.
நம் நாட்டில் 1998 அல்லது 2002-ல் மக்கள்தொகைக் கொள்கை வகுக்கப்பட்டது. பிறப்பு விகிதம் 2.1-க்கு கீழ் குறையக் கூடாது என்பதை இது தெளிவாகக் கூறுகிறது. பிறப்பு விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும் என்பதற்காக 0.1 என்ற அளவில் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது. எனவே, 2.1 என்று சொல்லும்போது குறைந்தபட்சம் 3 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்" என்றார் மோகன் பாக்வத்.