
இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படும். இதன்படி இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுப் பயன்பாட்டிற்காக விநியோகிக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களின் புதிய விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் அறிவிக்கும்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவை 14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும் சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.
இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 61.50 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூ. 1964.40 ஆக அதிகரித்துள்ளது. விலையேற்றத்துக்குப் பிறகு வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை தில்லியில் ரூ. 1802 ஆகவும், மும்பையில் ரூ. 1754.50 ஆகவும் உள்ளன. மாநில அளவில் விதிக்கப்படும் மாநில அரசின் வரிகள் இத்தகைய விலை வேறுபாட்டிற்கான முக்கியக் காரணமாகும்.
அதேநேரம், வீட்டு உபயோகத்துக்குப் பயன்படும் 14.20 கிலோ கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ரூ. 818.50 ஆகவே நீடிக்கும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடைசியாக கடந்த மார்ச் 1-ல் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.