தேர்தல் பத்திரங்கள்: எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ANI

தேர்தல் பத்திரங்கள்: எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நான்கு மாத காலம் அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனு மீதான விசாரணை வரும் திங்கள் அன்று...
Published on

தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், மேலும் அவகாசம் கேட்கப்பட்டதால் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms, ஏடிஆர்) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது, அது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என உச்ச நீதிமன்றம் பிப். 15 அன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வங்கிக்கு உத்தரவிட்டது. மேலும், அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய தகவல்களையும் மார்ச் 6-க்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி எஸ்பிஐ-க்கு உத்தரவிட்டது.

எனினும் தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் தேவை என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஏடிஆர் சார்பாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு முறையாக சரிபார்க்கப்பட்டுப் பட்டியலிடப்பட்டால், எஸ்பிஐ வங்கி கூடுதல் அவகாசம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

நான்கு மாத காலம் அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனு மீதான விசாரணை வரும் திங்கள் அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in