
வாக்குறுதி அளித்தபடி தகுந்த மணப்பெண்ணை தேடித்தராததால் பெங்களூருவைச் சேர்ந்த மேட்ரிமோனி நிர்வாகத்துக்கு ரூ, 60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் ஆணையம்.
கடந்த மார்ச் 17-ல் பெங்களூருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தன் மகன் பாலாஜிக்கு வரன் தேடும் வகையில் கல்யாண் நகரில் உள்ள தில்மில் மேட்ரிமோனி அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். தகுந்த மணப்பெண்ணைப் பார்த்துத்தர, ரூ. 30 ஆயிரம் செலுத்துமாறு விஜயகுமாரிடம் தெரிவித்துள்ளது தில்மில் மேட்ரிமோனி நிர்வாகம்.
இதை அடுத்து, அதே நாளில் மேட்ரிமோனி அலுவலகத்தில் ரூ. 30 ஆயிரம் செலுத்தியுள்ளார் விஜய்குமார். அதன்பிறகு, 45 நாட்களில் பாலாஜிக்குத் தகுந்த வரன் பார்த்துத் தரப்படும் என மேட்ரிமோனி நிர்வாகம் விஜயகுமாரிடம் உறுதி அளித்தது. ஆனால் 45 நாட்களுக்குள் தில்மில் மேட்ரிமோனியால் பாலாஜிக்குத் தகுந்த மணப்பெண்ணைப் பார்த்துத்தர முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 30-ல் தில்மில் மேட்ரிமோனி அலுவலகத்துக்குச் சென்ற விஜயகுமார், தான் செலுத்திய ரூ. 30 ஆயிரம் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்ப அளிக்க முடியாது என மறுத்தது மட்டுமல்லாமல், விஜயகுமாரை கடும் சொற்களால் திட்டியுள்ளனர் மேட்ரிமோனி ஊழியர்கள்.
இதைத் தொடர்ந்து மேட்ரிமோனி நிர்வாகத்தின் மீத் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார் விஜயகுமார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் ராமச்சந்திரா, `புகார் அளித்தவருக்கு வழங்கப்பட்ட சேவையில் குறைபாடு உள்ளது தெளிவாக தெரிகிறது. மேட்ரிமோனி நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது’ என்றார்.
இதைத் தொடர்ந்து, முன்பு செலுத்தப்பட்ட ரூ. 30 ஆயிரம், சேவை குறைபாடுக்காக ரூ. 20 ஆயிரம், மன உளைச்சலுக்காக ரூ. 5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ. 5 ஆயிரம் என, மொத்தம் ரூ. 60 ஆயிரத்தை விஜயகுமாருக்கு வழங்குமாறு தில்மில் மேட்ரிமோனி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது நுகர்வோர் ஆணையம்.