அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற சதி: சோனியா காந்தி

"பாஜகவில் இணையச் சொல்லி எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்."
சோனியா காந்தி
சோனியா காந்தி

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான சதித் திட்டம் நடந்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாதில் இரு பேரணிகளை காங்கிரஸ் மேற்கொள்கிறது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு சோனியா காந்தி பேசியதாவது:

"மோடி தன்னைத் தானே சிறந்தவர் என்று கருதி நாட்டையும், ஜனநாயகத்தையும் அழிக்கிறார். பாஜகவில் இணையச் சொல்லி எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். நாட்டின் ஜனநாயகம் அபாயத்தில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான சதித் திட்டம் நடந்து வருகின்றன.

வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறைகளைக் கட்டுப்படுத்துவதில் எதையும் செய்யாத ஆட்சியின் கீழ்தான் கடந்த 10 ஆண்டுகளாக நாடு இருந்திருக்கிறது. மோடி அரசு என்ன செய்துள்ளது என்பது நம் கண்முன் இருக்கிறது.

எல்லா இடங்களிலும் அநீதி சூழ்ந்திருக்கிறது. அநீதிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் இணைந்து போராடுவோம்" என்றார் சோனியா காந்தி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in