
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் காட்சி மாறினாலும், காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க பாஜக முயற்சித்தாலும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
இன்று காலை முதல், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 9.15, 9.30 மணி வரை காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. ஆட்சிப் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் தென்பட்டன.
முதல்வர் பதவிக்கு பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவும் எனப் பேச்சுகள் இருந்தன. பூபிந்தர் சிங் ஹூடா தான் சோர்வடையவும் இல்லை, ஓய்வு பெறவும் இல்லை என்று கூறியது கவனம் பெற்றது.
இந்த நிலையில்தான் காலை 9.30 மணிக்கு மேல் நிலவரம் மாறத் தொடங்கியது. காங்கிரஸ் படிப்படியாக சரிவைச் சந்தித்து வர, பாஜக முன்னிலைப் பெற்று வந்த இடங்கள் அதிகரித்தன.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி காலை 11.10 மணியளவில் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைக் கடந்து 49 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகித்தது. பகுஜன் சமாஜ் மற்றும் இந்திய தேசிய லோக் தளம் தலா ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கின்றன. சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இருந்தபோதிலும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என பூபிந்தர் சிங் ஹூடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முதல்வர் யார் என்பதை கட்சி முடிவு செய்யும். காங்கிரஸ் தனது பெரும்பான்மையை மீண்டும் பெறும். ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களுக்கு தான் இந்தப் பெருமை சேரும். குறிப்பாக இது ஹரியாணா மக்களைச் சேரும்" என்றார்.
12.30 மணியளவில் 10 சுற்றுகள் முடிவில் கர்ஹி சம்பலா - கிலோய் தொகுதியில் போட்டியிட்ட பூபிந்தர் சிங் ஹூடா 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஜூலானா தொகுதியில் 11 சுற்று முடிவில் வினேஷ் போகாட் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.