பாஜகவில் சார்பில் போட்டியிடும் என் மகன் தோற்க வேண்டும்: ஏ.கே. ஆண்டனி
ANI

பாஜகவில் சார்பில் போட்டியிடும் என் மகன் தோற்க வேண்டும்: ஏ.கே. ஆண்டனி

"எனக்கு குடும்பம் வேறு, அரசியல் வேறு. இந்த நிலைப்பாட்டு ஒன்றும் எனக்குப் புதிதல்ல."
Published on

கேரளத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் தனது மகன் தோற்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி கடந்த 2023-ல் பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தலில் இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. ஆண்டனி கூறியதாவது:

"பத்தனம்திட்டாவில் பாஜக தோற்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். ஆண்டோ ஆண்டனி வெற்றி பெறுவார்.

எனக்கு குடும்பம் வேறு, அரசியல் வேறு. இந்த நிலைப்பாட்டு ஒன்றும் எனக்குப் புதிதல்ல. கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பிலிருந்த நாள்களிலிருந்தே இதுதான் என்னுடைய நிலைப்பாடு. காங்கிரஸ் தான் எனது மதம்.

காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி தொடர்ச்சியாக மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்க்கிறார்கள். முதல்வர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இண்டியா கூட்டணி ஒவ்வொரு நாளும் முன்னோக்கி நகர்கிறது. பாஜக பின்னடைவைச் சந்திக்கிறது. ஆட்சியமைக்க எங்களுக்கு வாய்ப்புள்ளது" என்றார் அவர்.

காங்கிரஸ் மூத்த தலைவரான ஏ.கே. ஆண்டனி உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தேர்தல் பிரசாரங்களில் பெரிதளவில் ஈடுபடாமல் உள்ளார்.

கேரளத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 26-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in