திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு: கோபத்தில் காங்கிரஸ்!

"இண்டியா கூட்டணியில் நீடித்தால் பிரதமர் மோடி மகிழ்ச்சியடைய மாட்டார் என்ற அச்சத்தில் மமதா பானர்ஜி இருக்கிறார்."
அதீர் ரஞ்சன் சௌதரி (கோப்புப்படம்)
அதீர் ரஞ்சன் சௌதரி (கோப்புப்படம்)ANI

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்வினையாற்றியுள்ளது.

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் என முதல்வரும், கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி அறிவித்தார். இருந்தபோதிலும், திரிணமூல் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் இன்று வேட்பாளர்களை அறிவித்தது. மக்களவையிலிருந்து கடந்த டிசம்பரில் நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பர்ஹாம்பூர் தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் இந்தத் தொகுதியிலிருந்து 5 முறை மக்களவைக்குத் தேர்வாகியுள்ளார். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி அரசைக் கடுமையாக விமர்சிக்கும் இவர், இந்த முறையும் பர்ஹாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் யூசுப் பதான், அவரது தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸின் இந்த அறிவிப்பு இண்டியா கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர்கள் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்வினை ஆற்றியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

"மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் மரியாதைக்குரிய எண்ணிக்கையில் தொகுதிப் பங்கீடு செய்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் திரும்பத் திரும்ப விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வேண்டும், ஒருதலைபட்சமாக அறிவிக்கக் கூடாது என்பதை காங்கிரஸ் தொடர்ச்சியாகக் கடைபிடித்து வருகிறது. பாஜகவுக்கு எதிராக இண்டியா கூட்டணி ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்பதையே காங்கிரஸ் எப்போதும் விரும்புகிறது" என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

அதீர் ரஞ்சன் சௌதரி கூறியதாவது:

"இந்தியாவில் எந்தவொரு அரசியல் கட்சிகளும் தன்னைப் போன்ற ஒரு தலைவரை நம்பக் கூடாது என்பதை மமதா பானர்ஜி இன்று நிரூபித்துள்ளார். இண்டியா கூட்டணியில் நீடித்தால் பிரதமர் மோடி மகிழ்ச்சியடைய மாட்டார் என்ற அச்சத்தில் மமதா பானர்ஜி இருக்கிறார். இண்டியா கூட்டணியிலிருந்து விலகியதன் மூலம், என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம், நான் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடவில்லை என பிரதமர் அலுவலகத்துக்குச் செய்தி அனுப்பி உள்ளார்" என்றார் அதீர் ரஞ்சன் சௌதரி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in