
மக்களவை விதிகளின் கீழ் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர மக்களவை சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி.
கடந்த ஜூலை 30-ல் மக்களவையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவருக்குப் பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை எம்.பி.யுமான அனுராக் தாக்கூர், `தன்னுடைய ஜாதி பற்றித் தெரியாத ஒருவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசுகிறார்’ என்றார்.
அனுராக் தாக்கூரின் இந்த வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அனுராக் தாக்கூருக்கு பதிலளித்த ராகுல் காந்தி, `என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மசோதாவை எதிர்க்கட்சிகள் நிறைவேற்ற வைக்கும்’ என்றார்.
மக்களவையில் தொடர்ந்து அமளி நடந்ததை ஒட்டி, அப்போது மக்களவையை வழிநடத்தி வந்த ஜகதாம்பிகா பால், அனுராக் தாக்கூரின் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மக்களவையில் ராகுல் காந்தியை எதிர்த்து அனுராக் தாக்கூர் பேசிய காணொளி பிரதமர் மோடியின் எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டது. `துடிப்பான இளையவரான அனுராக் தாக்கூரின் பேச்சைக் கண்டிப்பாகக் கேட்க வேண்டும். இது இண்டியா கூட்டணியின் மோசமான அரசியலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது’ என்று காணொளியின் பதிவில் குறிப்பிட்டிருந்தார் மோடி.
`மக்களவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பேச்சுகளை தன் எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது மட்டுமல்லாமல் உரிமை மீறல் பிரச்னையாகும். எனவே பிரதமருக்கு எதிராக அவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்’ சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி.